தற்போது 39 வயதான மிதாலி ராஜ் சென்ற ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், மகளிா் உலகக் கோப்பை போட்டியே சர்வதேச கிரிக்கெட்டில் நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நியூசிலாந்தில் வரும் மார்ச் 4 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மிதாலி ராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதிலும் மிதாலி ராஜ் தலைமையிலான அணியே விளையாடும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் மிதாலி ராஜ், ''இது ஒரு அற்புதமான பயணம் என்று நான் நினைக்கிறேன். இது எளிதானது அல்ல. போராட்டங்களும் இருந்தன, ஆனால் அது ஒரு முழு வட்டத்திற்கு வந்துள்ளது. எனது முதல் உலகக் கோப்பை 2000ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடந்தது, இப்போது எனது 6வது உலகக்கோப்பை போட்டிக்காக நியூசிலாந்து செல்கிறேன்.
2000ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது, ஆனால் இந்த முறை, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். உலகக் கோப்பையை வெல்வது எப்போதுமே எந்த கிரிக்கெட் வீரருக்கும் சிறப்பானதாக இருக்கும். அதில் நான் வேறுபட்டவள் அல்ல. இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல என் மனம் தூண்டுகிறது'' என்றார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மிதாலி ராஜ், ''அங்கு விஷயங்கள் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம் இப்போது எனது சிந்தனை அடுத்த இரண்டு மாதங்களில் உள்ளது. எனது முழு ஆற்றலும் கவனமும் உலகக் கோப்பை மீதுதான் உள்ளது" என்றார்.
தற்போது 39 வயதான மிதாலி ராஜ் சென்ற ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், மகளிா் உலகக் கோப்பை போட்டியே சர்வதேச கிரிக்கெட்டில் நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.