மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.
மகளிருக்கான ஆறாவது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. 24 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்த் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் வலுமிக்கதாக திகழ்கிறது. எனவே இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே அரை இறுதிக்கும் நுழையும் என்பதால் இது இந்திய அணிக்கு சவாலானதாகவே இருக்கும். கடந்த மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி லீக் சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் மிதாலி ராஜ், மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், எக்தா பிஷ்ட், தீப்தி சர்மா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் இந்தியா வெல்ல வாய்ப்பிருக்கிறது.
(ஹர்மன்பிரீத் கவுர்)
முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இந்த போட்டி, இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. மற்றும் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்-பங்களாதேஷ் அணிகளும் மோதும் போட்டிகள் இன்று அதிகாலை நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா, மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா, தான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.
மகளிர் கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ். முறை, இந்த உலக கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது. டி 20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 3 முறை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.