தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் இறுதியாட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சில் இங்கிலாந்து அணியை மிரட்டி வருகிறது.
மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று 4 பிரிவாக விளையாடிய இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இதையடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சையில் இறங்கின. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய யு19 மகளிர் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில், அதன் தொடக்க மற்றும் நடுநிலை பேட்டர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் அந்த ஆணி ஆரம்பம் முதலே சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தொடக்க பேட்டரில் லிபர்டி ஹீப், கோல்டன் டக் அவுட் ஆனார்.
மற்றொரு பேட்டரான ஸ்கிரிவென்ஸ் 4 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் மெக் டொனால்டு கேய் மட்டுமே 19 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீராங்கனையான ஹோலந்து அதிகபட்சமாக 10 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சால் அந்த அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து பரிதவித்தது. அதுபோல் ஹன்னா பக்கரும் டக் அவுட் ஆனார். இறுதியில், அந்த அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியை டைட்டஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்சவி சோப்ரா ஆகிய இந்திய வீராங்கனைகள் மிரட்டியதுடன் 3 பேருமே தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.