மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா யு19 மகளிர் அணியை எதிர்கொண்ட இந்திய யு19 மகளிர் அணி எளிதாக வெற்றிபெற்றது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 16) நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
முதலில் இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக களமிறங்கிய கேப்டன் ஷஃபாலி வர்மாவும் ஸ்வேதா ஷெராவத்தும் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். அப்போது, 34 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த ஷஃபாலி வர்மா, இந்துஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். ஷஃபாலி வர்மா, 4 சிக்ஸர்களையும் 12 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ரிச்சா கோஷும் தன் பங்குக்கு 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத தொடக்க பேட்டர் ஸ்வேதா ஷெராவத் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அமீரக அணியில் தொடக்க வீராங்கனைகள் சோபிக்காததால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றிகண்ட உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது.