துருக்கியில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் நிகாத் சரீன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், அரையிறுதியில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை எதிர்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரீன், 5-0 என்ற கணக்கில் வெற்றியை ஈட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜிட்பாங் உடன் இன்று பலப்பரீட்சை நடத்தினார் நிகாத் சரீன்.
முதல் சுற்றில் நிகாத் சரீன் மற்றும் தாய்லாந்தின் ஜூடாமாஸ் ஜிட்பாங் ஆகியோர் ஒருவருக்கொருவர் சரமாரியாக குத்துக்களை வீசியதால், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் நடைபெற்றது. இரண்டாவது சுற்றும் அதே போல் கடும் போட்டி மிக்கதாகவே அமைந்தது. போட்டி முழுவதும் நிகாத் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டார்.
ஐந்து நடுவர்களும் சண்டையை 10-9 என்ற கணக்கில் முதல் இரண்டு சுற்றுகளில் நிகாத்துக்கு ஆதரவாக மதிப்பெண் அளித்தனர். இறுதிச் சுற்றிலும் அவர் முன்னிலை வகித்தார். நடுவர்கள் 5-0 என்ற கணக்கில் ஏகமனதாக நிகாத் வெற்றி பெற்றதை அறிவித்ததை அடுத்து நிகாத் மகிழ்ச்சியில் மூழ்கினார். மேரிகோமிற்கு அடுத்தபடியாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார் நிகாத் சரீன்.