இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவர் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இந்தியாவின் 294-வது டெஸ்ட் வீரராக அவர் களமிறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில், காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத கேப்டன் ஜேசன் ஹோல்டர் அணிக்குத் திரும்பினார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் வாரிகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கீமோ பால், லெவிஸ் நீக்கப்பட்டனர்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த போட்டியில், விக்கெட்கள் சரிந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ரன்களை குவித்தனர். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் குவிப்பும் தொடர்ந்தது. 113 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அப்போது, ரோஸ்டன் சேஸ்- டோவ்ரிச் ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தது. டோவ்ரிச் 30 ரன்னில் ஆட்டமிழக்க, சேஸுடன் ஜோடி சேர்ந்தார் ஹோல்டர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இதனால், நீண்ட நேரம் விக்கெட் விழவில்லை. அரைசதம் அடித்த நிலையில், 90வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார் ஹோல்டர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 95 ஓவர்கள் விளையாடி, 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அபாரமாக விளையாடிய் ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக அவர் அடிக்கும் இரண்டாவது சதம். அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்காததால், அந்த அணி 101.4 ஓவர்களில் 311 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பிருத்வி ஷாவும் கே.எல்.ராகுலும் ஆடி வருகின்றனர்.