உலக அரங்கில் அனைத்து விளையாட்டுகளிலும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் ஆடவர்களை போலவே பெண்களும் புதிது புதிதாக பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டமானது, வரலாற்றில் புதிய ஒரு மைல்கல் சாதனையை எழுதியுள்ளது.
உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனை லெசியா சுரென்கோ மற்றும் ருமேனிய டென்னிஸ் வீராங்கனை அனா போக்டன் இடையேயான விம்பிள்டன் 2023 மூன்றாவது சுற்று ஆட்டமானது நேற்று நடைபெற்றது. சாதாரணமாக தொடங்கிய இந்த போட்டி விம்பிள்டன் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்தும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
முதல் சுற்றில் சிறப்பாக விளையாடிய போக்டன் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த லெசியா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி கடைசி செட்டிற்கு சென்று விறுவிறுப்பாக மாறியது. டை-பிரேக் ஆட்டத்தில் முடிவு எளிதாகவே எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க... ஆட்டம் வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்தது.
நிமிடங்களில் நீடித்த இப்போட்டி, ஒருகட்டத்தில் மணி நேரத்தை தொடுமளவு அடுத்தடுத்த நிலைக்கு சென்றது. அப்படியான இந்த கடைசி செட்டில் உயிரை கொடுத்து விளையாடிய இரண்டு வீராங்கனைகளும், ஒருகட்டத்தில் சோர்வாகினர். அது அவர்களின் உடல்மொழியிலேயே நமக்கும் தெரிந்தது. 2 மணி நேரத்தை கடந்த இந்த போட்டியானது, 3 மணி நேரத்தை நெருங்கி கொண்டிருந்த போது, இரண்டு வீராங்கனைகளும், சோர்வை தாண்டி தசைப்பிடிப்பால் அவதியுற்றனர். இதனால் போட்டியில் சிறிது நேரம் இடைவெளி விடப்பட்டது. தொடர்ந்து வீராங்கனைகளுக்காக, மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இடைவெளிக்கு பிறகு தொடங்கப்பட்ட போட்டியில் மீண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடினர். 6-6 என்ற செட் கணக்குடன் 18-18 என சமநிலையில் புள்ளிகள் இருக்க, சோர்ந்தாலும் இருவரும் உயிரை கொடுத்து விளையாடினர். கடைசி செட்டுக்கான ஆட்டம் மட்டும் 1 மணி நேரம் 40 நிமிடங்களை கடந்து சென்றது. 3 மணி நேரம் 40 நிமிடங்கள் கடந்த இந்த போட்டியின் முடிவில், போக்டன் டவுன் தி லைனிற்கு வெளியே அடித்ததால் முடிவில் ஒருவழியாக லெசியா 20-18 என்ற புள்ளிகளுடன் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்றார். வெற்றிபெற்றவுடன் லெசியாவிற்கு கால்கள் நடுங்க ஆரம்பிக்க மைதானத்திலேயே விழுந்தார். முடிவில் இரண்டு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.
போட்டி முடிந்த சிறிது நேரத்தில் சர்வதேச டென்னிஸ் பெட்ரேசன் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் டை-பிரேக்கர் ஆட்டம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு டைபிரேக்கரில் பெற்ற 36 புள்ளிகளே அதிகபட்சமாக இருந்த நிலையில், அதனை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர் லெசியா மற்றும் போக்டன்.
மேலும் 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் ஜோ-வில்பிரைட் சோங்காவை எதிர்த்து ஆண்டி ரோடிக் வெற்றி பெற்ற 38-புள்ளிகளை சமன் செய்து சாதனை படைத்துள்ளனர்.