'சூரியகுமார் யாதவிற்கு ஏழெட்டு போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அவரிடம் ரன்களை எதிர்பார்க்க முடியும்' என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.
இந்திய அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எந்தவித விக்கெட் இழப்புமின்றி 11-வது ஓவரிலேயே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. டி20 போட்டியை விட ஆட்டம் சீக்கிரமாக முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.
முதல் போட்டியை போன்றே இரண்டாவது போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் டக் ஆகியிருக்கிறார் அவர். டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது சராசரியும் 25.47 மட்டுமே உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவுற்றவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் சூரியகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, “ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது வருவார் என்று தெரியாது. மிடில்-ஆர்டரில் இடம் காலியாக இருக்கிறது. அதில் சூரியகுமார் யாதவை மட்டுமே விளையாட வைக்க முடியும். முந்தைய போட்டிகளில் தனது திறமையை சூரியகுமார் யாதவ் காட்டியுள்ளார். ஆகையால் அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவருக்கும் நன்றாக தெரியும், மீண்டும் நல்ல மனநிலைக்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்திருப்பார். அவருக்கு முந்தைய தொடர்களில் உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று திறமையான வீரே ஒருபோதும் நினைத்து விடக்கூடாது.”
சூரியகுமார் யாதவிற்கு 7-8 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அவரிடம் ரன்களை எதிர்பார்க்கலாம். அவர் இப்போது நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் இப்போது மாற்றுவீராக மட்டுமே விளையாடி வருகிறார். ஆகையால் அவரிடம் இருந்து தொடர்ச்சியான ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அடுத்தடுத்த தொடர்களில் நிறைய போட்டிகள் விளையானால், அவரிடம் இருந்து எதிர்பார்போம். இப்போதைக்கு ஷ்ரேயாஸின் நிலை தெரியும்வரை சூரியகுமார் அணியில் இருப்பார்” என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.