வழக்கமாக அதிரடியை கிளப்பும் ராஜஸ்தானின் அதிரடி மன்னர்கள் இன்று மும்பை பவுலர்களிடம் திணறியபடி விளையாடி ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2022 சீசனின் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தானின் தரப்பில் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லரும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். வழக்கமாக மும்பைக்கு எதிராக வெகுண்டெழுந்து ரன்களை விளாசும் பட்லர் இம்முறை நிதானமாக விளையாடத் துவக்கினார்.
டேனியல் சாம்ஸ் வீசிய ஓவரில் படிக்கல் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச ஸ்கோர் உயரத் துவங்கியது. ஆனால் ஹ்ரித்திக் சோகீன் வீசிய ஓவரில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார் படிக்கல். அதே ஓவரில் அடுத்து பட்லர் சில பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் இரு சிக்ஸர்களை விளாசிவிட்டு குமார் கார்த்திகேயா ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். பட்லரும் அளவுக்கு அதிகமாக நிதானமாக விளையாட, தொடர்ந்து 4 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி கூட ராஜஸ்தானால் அடிக்க இயலவில்லை. டேனியல் சாம்ஸ் ஓவரில் மீண்டும் பவுண்டரி விளாசி இயல்புக்கு திரும்பினார். ஹ்ரித்திக் வீசிய ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்த அவர், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
ரியான் பராக் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடத் துவங்கினார். பும்ரா ஓவரில் 2 பவுண்டரிகள் பறக்கவிட்டு அதகளம் காட்டிய அவர், மெரிடித் வீசிய கடைசி ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 158 ரன்களை குவித்தது. ராஜஸ்தானின் வலுவான பவுலிங் யூனிட்டுக்கு எதிராக 159 ரன்களை எட்டி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது மும்பை அணி.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். 4 ஓவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன் எடுத்துள்ளது.