ஐஎஸ்எல் போட்டி: இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னையின் எஃப்சி ?
ஐஎஸ்எல் கால்பந்தாட்டப் போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சென்னையின் எஃப்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
இரண்டு முறை இந்திய சூப்பர் லீக் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, இந்த சீசனின் அரையிறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டம் வரும் 29 ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு மைதான்ததில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை வேகமெடுத்துள்ளது. இதனையடுத்து மார்ச் 14 ஆம் தேதி ஐஎஸ்எல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணி 2021-இல் நடக்கவுள்ள ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடக்க சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்த ஆண்டுப் போட்டியில் ஒருகட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை அணி. அதன் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை விட்டு, கடைசி இடத்துக்குக் கீழிறங்கியது. 2019-2020 சீசனில் புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டு அணிக்கு புதிய வேகம் கொடுக்கப்பட்டது.
சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து ஐஎஸ்எல் பட்டம் வென்று கொடுத்த ஜான் கிரகோரி, தற்போதைய நிலைமையை உணர்ந்து பதவி விலகினார். முதல் ஆறு ஆட்டங்களில் 3-ல் தோற்று இரண்டை டிரா செய்து ஒரு வெற்றி மட்டுமே பெற்றுப் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்ததால் நெருக்கடி காரணமாக கிரகோரி பதவி விலகினார். அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஓவன் கோயல் புதிய பயிற்சியாளராகத் தேர்வானார்.
முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்த சென்னை அணி, அதன்பிறகு விளையாடிய 14 ஆட்டங்களில் 8-ல் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் சென்னை அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்தது. புதிய வேகத்தில் விளையாடி வரும் சென்னை அணி, மூன்றாவது முறையும் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.