இறுதிச் சுற்றுக்குள் முதலாவதாக நுழையுமா சென்னை? - நாளை டெல்லி அணியுடன் மோதல்

இறுதிச் சுற்றுக்குள் முதலாவதாக நுழையுமா சென்னை? - நாளை டெல்லி அணியுடன் மோதல்
இறுதிச் சுற்றுக்குள் முதலாவதாக நுழையுமா சென்னை? - நாளை டெல்லி அணியுடன் மோதல்
Published on

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் கடைசி நாள் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன. இதனையடுத்து, நாளை நடைபெறும் முதல் பிளே ஆஃப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

அமீரகத்தில் அனல் பறக்க அரங்கேறி வரும் 14 ஆவது சீசன் ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தன. லீக் சுற்றின் கடைசி நாளான நேற்று இந்திய நேரப்படி இரவு 7.30மணிக்கே இரு போட்டிகள் நடைபெற்றன.

பிரித்வி ஷா, தவன் அதிரடி தொடக்கம்:  துபாயில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த டெல்லி அணியின் பிரித்வி ஷா, தவன், ஹெட்மெயர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 164 ரன்களைச் சேர்த்தது.

படிக்கல் டக் அவுட், கோலி 4 ரன்னில் அவுட்: இதையடுத்து 165 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் படிக்கல் டக் அவுட் ஆகி வெளியேற, கேப்டன் கோலி 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பரத், மேக்ஸ்வெல் இணை அதிரடியாக ரன்களைச் சேர்த்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்த, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. சுதாரித்து விளையாடிய பரத், பந்து வீசிய ஆவேஷ்கானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிக்ஸர் விளாசி அணிக்கு த்ரில் வெற்றியை வசப்படுத்தினார்.

ரன் மழை பொழிந்த இஷான் கிஷன், சூர்யகுமார்: அபுதாபியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பிளே ஆஃப்க்குச் செல்ல 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த மும்பை அணி, முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களும், மத்திய கள வீரர் சூர்யக்குமார் 40 பந்துகளில் 82 ரன்களும் விளாச மும்பை அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஜேசன் ராய், அபிஷேக் ஜோடி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கேப்டன் மணிஷ் பாண்டேவும் பொறுப்புடன் விளையாடி 69 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றாலும் வெளியேறிய மும்பை: லீக் சுற்றுகளின் முடிவில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன. கொல்கத்தாவுக்கு இணையான புள்ளிகள் இருப்பினும் நெட் ரன் ரேட் இல்லாததால் மும்பை அணி 5 ஆம் இடம் பெற்று பிளே ஆஃப் வாய்பை இழந்தது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் முறையே 6,7 மற்றும் 8 ஆம் இடத்தை பிடித்தன. தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

நாளை நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துவுள்ளன. அமீரகத்தில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடி வந்த சென்னை அணி கடைசி மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை அளித்து வருகிறது. எப்படியும் சிஎஸ்கே இறுதிப் போட்டியில் வென்று கடந்த ஆண்டு அடைந்த படுதோல்விக்கு ஈடுகட்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com