இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை சிட்னி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியாக நடைபெறும் இந்த போட்டி பிங்க் டெஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது.
வழக்கமாக பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியைதான் பிங்க் பால் டெஸ்ட் என சொல்வார்கள். இந்தத் தொடரில் இரு அணிகளும் ஒரு பகல் இரவு போட்டியில் விளையாடி உள்ளன. இந்நிலையில் சிட்னி போட்டி பிங்க் டெஸ்ட் என சொல்லப்படுவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத்தின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த பிங்க் டெஸ்டை முன்னெடுத்துள்ளது. மெக்ரத், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 முதல் சிட்னி மைதானத்தில் இந்த பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
அதையடுத்து நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பச்சை நிற தொப்பிக்கு பதிலாக பிங்க் நிற தொப்பியில் பிரகாசிப்பர். கடைசியாக ஆஸ்திரேலியா நியூஸிலாந்துடன் பிங்க் டெஸ்டில் விளையாடி இருந்தது.