சர்வதேச கிரிக்கெட்டின் ‘ஹிட்மேன்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரோகித் ஷர்மா. அதற்கு காரணம் அவரது ஹிட் ஆன ஆட்டம்தான். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் போது இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.
அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அது பலத்த சர்ச்சையாக வெடித்தது. ரசிகர்கள் அது குறித்து விமர்சித்திருந்தனர். அதே நேரத்தில் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தனது உடல் திறனை நிரூபித்தார். அதையடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சேர்க்கப்பட்டார். அதுவும் சர்ச்சையானது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சி செய்து வருகிறார் ரோகித்.
இந்நிலையில் ரோகித்தின் காயம் குறித்த விவரங்கள் குழப்பம் கொடுப்பதாகவே உள்ளது என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோகித் ஏன் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணிக்கவில்லை என்பதை பிசிசிஐ விளக்கியுள்ளது…
“ஐபிஎல் தொடரை முடித்த கையோடு ரோகித் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. மும்பையில் உள்ள அவரது அப்பா நோய்வாய்ப்பட்டது தான் அதற்கு காரணம். தற்போது ரோகித்தின் அப்பா உடல்நலனில் முன்னேற்றம் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.
வரும் டிசம்பர் 11 ஆம் தேதியன்று அவருக்கு நடத்தப்பட உள்ள உடற்தகுதி தேர்வு முடிவுகளை பொறுத்து தான் ரோகித் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என தெரியவந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.