பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா விளக்கம் அளித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பங்களாதேஷில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மோர்டாஸாவை களமிறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் அலம் ஹனிஃப் கூறும்போது, ‘மோர்டாஸா போட்டியிட பிரதமர் ஷேக் ஹசினா பச்சைக் கொடி காட்டிவிட்டார். மோர்டாஸாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். பங்களாதேஷின் மேற்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தொகுதியான நரேலில், மோர்டாஸா போட்டியிடுகிறார்’ என்றார். இதுபற்றி மோர்டாஸா வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.
(ஷேக் ஹசீனாவுடன் மோர்டாசா)
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, ‘கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் பயன்படுத்த விரும்பினால், அதனால் எங்களுக்கு பிரச்னை இல்லை’ என்றார்.
தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவது புதிதில்லை. ஆனால், ஓய்வுபெற்ற பிறகுதான் அரசியலில் ஈடுபடுவார்கள். அணியில் இருக்கும் வீரர் ஒருவர், அரசியலில் களமிறங்குவது இதுதான் முதல் முறை.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி அவர் முதன்முறையாக முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். ‘அரசியலில் இறங்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய முடியாது என்று எப்போதும் நம்புவேன். இப்போது நாட் டுக்காக நல்லது செய்ய எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு என்ன நடக் கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாம் சரியான நேரத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி, இப்போது பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
மோர்டாஸா, உலகக் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2009 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 199 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்டாஸா, 252 விக்கெட்டுகளையும் 1722 ரன்களையும் எடுத்துள்ளார்.
மோர்டாஸா அரசியலில் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.