பிரித்வி ஷாவுக்கு அணியில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது முரளி விஜயும் சேர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடைசியாக ஜூலை 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தான் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டார்.
எனினும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிரித்வி ஷா சையது முஸ்தாக் அலி தொடரில் கடந்த ஆண்டு 363 ரன்கள் அடித்தார். இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 379 ரன்கள் விளாசி தன்னுடைய திறமையை பிரித்வி ஷா நிரூபித்தார்.
இருப்பினும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை. பிரித்வி ஷாவுக்கு அணியில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ள முன்னாள் வீரர் முரளி விஜய், "அவருக்கு (பிரித்வி ஷா) ஏன் இப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அணி நிர்வாகத்திடம்தான் இதை கேட்க வேண்டும்.
இந்தியாவுக்காக 15 சூப்பர் ஸ்டார்கள் விளையாடுகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே எனக்கு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் திறமையின் அடிப்படையில், நான் ஷுப்மான் கில் மற்றும் பிருத்வி ஷாவை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்கள். ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்'' என்றார்.