“தோனியும் கேதாரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர்”-  ரோகித் ஷர்மா விளக்கம்

“தோனியும் கேதாரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர்”-  ரோகித் ஷர்மா விளக்கம்
“தோனியும் கேதாரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர்”-  ரோகித் ஷர்மா விளக்கம்
Published on

தோனி மற்றும் கேதார் ஜாதவின் மந்தமான ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரோகித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது களத்தில் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் பவுண்டரிகள் அடிக்காமல் சிங்கிள் அடிப்பதில் ஆர்வம் காட்டினர். இறுதியில் இந்த ஜோடி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இவர்கள் இருவரும் 20 சிங்கிள் ரன்கள் அடித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றம் அளித்தது. 

இதனையடுத்து இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் ஏமாற்றத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில், “தோனி மற்றும் கேதார் ஆகிய இருவரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர். 

ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால், அவர்களால் பவுண்டரி அடிக்க இயலவில்லை. இந்தச் சூழலை இங்கிலாந்து அணியினர் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்லோ பால்களை அதிகமாக வீசினர். அத்துடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் லைன் அண்ட் லெங்த் ஐ எங்களால் எளிதில் கணிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல இந்திய கேப்டன் விராட் கோலி, “தோனி பவுண்டரி அடிக்க கடுமையாகப் போராடினார். எனினும் இங்கிலாந்து அணியினர் நன்றாக பந்துவீசியதால் பவுண்டரிகள் அடிப்பது கடினமானது. இந்தத் தோல்வி குறித்து ஆராயவேண்டும்” எனக் கூறினார். இந்தப் போட்டியில் தோனியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் சாடி வந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com