கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் பல்வேறு போட்டிகள் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டன. திட்டமிடப்படி இன்று ஜப்பான் தலைநகர்
டோக்கியோவில் தொடங்கப்பட இருந்த ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்க இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ரத்து செய்யப்பட்டது. இப்படி பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலும், இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான 13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் மட்டும் ரத்து செயயப்படவில்லை. இந்தாண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், அந்தத் தேதிகளை பயன்படுத்தி ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்துகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் 8 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். விரைவில் எத்தெந்த அணிகள் எந்தெந்த அணிகளோடு மோத உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பரப்பு உரிமை ரூ.3300 கோடி !
இதனையடுத்து பிசிசிஐ ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஏன் ரத்து செய்ய முடியவில்லை என்ற காரணங்களும் வெளியாகி இருக்கிறது. இந்த 13 ஆவது ஐபிஎல் தொடர் நடத்தப்படவில்லை என்றால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதில் முதலாவதாக ஐபிஎல் ஒளிப்பரப்பு உரிமை தொகையை போட்டி நடைபெறவில்லை என்றால் பிசிசிஐ இழக்கும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஸ்டார் டிவி நேரலையாக ஒளிப்பரப்பு செய்கிறது. இதற்காக பிசிசிஐக்கு ரூ.3300 கோடியை ஆண்டுதோறும் வழங்குகிறது. 13 ஆவது ஐபிஎல் தொடரை ஒளிப்பரப்ப பிசிசிஐக்கு ரூ.2000 கோடியை ஏற்கெனவே ஸ்டார் நிறுவனம் செலுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"டை்டில் ஸ்பான்ஸர்" ரூ.440 கோடி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரதான ஸ்பான்ஸராக விவோ இருக்கிறது. இதற்காக ரூ.440 கோடியை பிசிசிஐயிடம் கொடுத்திருக்கிறது விவோ நிறுவனம். சீன நிறுவனப் பொருள்களுக்கு தடை, சீன செயலிகளுக்கு தடை என்ற போதிலும் ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பை பிசிசிஐயால் எதையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் பிசிசிஐ விவோ நிறுவனத்திடம் ஏற்கெனவே இதுதொடர்பான ஒப்பந்தத்தை போட்டுவிட்டது. இப்போது ஐபிஎல் ரத்தானால் இந்தத் தொகையையும் பிசிசிஐ விவோக்கு செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் ரூ.170 கோடிக்கு சிறிய சிறிய ஸ்பான்ஸர்களையும் பிசிசிஐ இழக்க நேரிடும். உதாரணத்துக்கு ட்ரீம் 11, பேடிஎம், சியட் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்ஸர் செய்துள்ளது.