காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முன்னாள் சாம்பியனான காஷ்யப் ‘நான் ஏன் ஒலிம்பிக் தகுதி போட்டிகளுக்கான தேசிய முகாமில் இல்லை?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் தகுதி போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் தற்போது பேட்மிண்டன் ஆட்டத்திற்கான முகாம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்..
"பயிற்சி முகாம் தொடர்பாக எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. எட்டு பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதிப்பது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன். மேலும் இந்த எட்டு பேர் மட்டும் எப்படி ஒலிம்பிக் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி.
இதில் மூன்று பேர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தகுதி சுற்றோடு வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
சாய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக உலக தரவரிசையில் நான் 23 வது இடத்தில் இருக்கிறேன், பிறகு நான் ஏன் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை.
இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்திடமும் கேள்வி எழுப்பினேன். ஆனால் அது உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு உத்தரவு என்று தெரிவித்தனர். எனக்கு இது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.