ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லையென்றால், பாகிஸ்தான் அணியும், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு வரமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் பங்குபெற்று விளையாடும் ஆசியக் கோப்பை தொடர், கடந்த 1984-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இதில் சுழற்சி முறையில் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் 50 ஓவர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தற்போது இதுதான் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏனெனில் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் இருதரப்பு தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதில்லை. ஐசிசி தொடர்களிலும் இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் மட்டுமே பங்குபெற்று ஆடிவருகின்றன. குறிப்பாக இந்திய அணி கடைசியாக 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றதுதான். அதன்பின்னர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு, இந்திய அணி கிரிக்கெட் ஆட செல்லவில்லை. அதேபோல், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைக்காக கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தது. அதன்பின்னர் அந்த நாடும் இந்தியாவுக்கு வந்து ஆடவில்லை.
இதற்கிடையில் ஐசிசியின் 50 ஓவர் உலகக் கோப்பை அடுத்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் இந்தியாவில் நடைபெறவுள்ளநிலையில், அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மேலும் அடுத்தாண்டு ஆசியக் கோப்பை பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் என்றும் பிடி கொடுக்காமல் பேசிவந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கையெல்லாம் விட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வீரருமான ரமீஸ் ராஜா, ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் வரவில்லையென்றால், பாகிஸ்தான் அணியும், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு வரமாட்டோம் என்று மௌனம் கலைத்துள்ளார்.
அவர் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில், “அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்? எங்களிடம் தெளிவான நிலைப்பாடு உள்ளது. இந்திய அணி இங்கு வந்தால் உலகக் கோப்பைக்கு நாங்கள் அங்கு செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை அவர்கள் விளையாடலாம். ஆக்ரோஷமான அணுகுமுறையை நாங்களும் கடைப்பிடிப்போம். எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், அது நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நடக்கும். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசியக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட பொருளாதார அணியை இரண்டு முறை தோற்கடித்துள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார்.