இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஐபிஎல்லில் இந்த இரு அணிகளின் பயணமும் ஒரே மாதிரியானவை. இரு அணிகளும் முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கினார்கள். அடுத்து புத்துயிர் பெற்று எழுந்து இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவுசெய்தன. பின்னர் 5வது ஆட்டத்தில் தோல்வியடைந்து 6வது மற்றும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இப்போது அந்த அணிகள் தங்கள் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்குகின்றன.
ஆர்சிபியின் முதன்மைக் கவலை “டாப் ஆர்டர்”. 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இடையே ஒரு ஐம்பது பிளஸ் ஸ்கோர் மட்டுமே வந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 88 ரன்கள் குவித்த டு பிளெஸ் ஃபார்முக்கு திரும்பி அசத்தினார். அந்த போட்டியில் அவர் ஸ்டிரைக் ரேட் 154 ஆகும். அதே நேரத்தில் கோஹ்லி அந்த ஆட்டத்தில் 29 ரன்களில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். அதற்குமுன் விளையாடி 5 போட்டியிலும் டு பிளசிஸ் சோபிக்க தவறியிருந்தார். முதல் ஐந்து ஆட்டங்களில் கோலியின் ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 101.42. இதுவும் ஆர்சிபியின் டாப் ஆர்டரை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பாக விளையாடி தற்போது வரை ஆர்சிபியின் டாப் ஆர்டர் பிரச்சனையை மறைத்து வருகின்றனர். ஆனால் சீசனின் முதற்பாதி நெருங்கும் நிலையில் டாப் ஆர்டர் சீரான ஃபார்முக்கு வருவதும் அவசியம். பவுலிங்கில் ஹர்ஷல் படேல் நம்பிக்கை அளிக்கிறார். கடைசி ஆட்டத்தில் முகமது சிராஜின் மேம்பட்ட ஆட்டம் அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மறுபக்கம் லக்னோ அணியில் சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ராகுல் அவர்களுக்கு முதன்மை பலம். மார்கஸ் ஸ்டோனிஸ், கடைசி இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. மனிஷ் பாண்டே கடைசி ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் ரன்களை குவிப்பதில் கவனம் செலுத்துவது பலமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீராவின் அதிக ரன்களை கசிய விடுவது குறித்து லக்னோவிற்கு சற்று கவலையளிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திக் வேகப் பந்துவீச்சிற்கு எதிராக 248.33 ஸ்டிரைக் ரேட்டில் நல்ல விகிதத்தில் அடித்திருந்தாலும், அவர் சுழலுக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக அடிக்கவில்லை. மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 141.17 ஆகும். இது மணிக்கட்டு சுழலுக்கு எதிராக 75 ஆக குறைகிறது. எனவே தினேஷ் கார்த்தின் வேகத்திற்கு ஸ்பீட் ப்ரேக்கராக லக்னோ அணி ரவி பிஷ்னோய்-ஐ பயன்படுத்தக் கூடும். மொத்தத்தில் இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இப்போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.