சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக நேற்று கோப்பையை வென்றிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு பஹார் ஜமானின் செஞ்சுரியும் காரணம். இந்த ஜமான் 3 ரன்னில் இருந்த போது பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அது நோ-பாலானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட பஹார் ஜமான், இந்திய பந்து வீச்சை சிதறடித்து தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அவர் எடுத்த ரன்கள் 114.
யார் இந்த பஹார் ஜமான்?
பாகிஸ்தானின் மர்டான் மாவட்டத்தில் உள்ள கட்லாங் பகுதியை சேர்ந்தவர் இந்த ஜமான். படிப்புக்காக கராச்சிக்கு வந்த இவர், பிறகு பாகிஸ்தான் கப்பல் படையில் வேலைக்கு சேர்ந்தார். சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆசை. ‘ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு, கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டு’ என்று பெற்றோர்களால் அடக்கி வைக்கப்பட்டார். இருந்தாலும் விட்டுவிடுமா ஆட்டம்? அவ்வப்போது ஆடி வந்த ஜமானின் திறமை, கப்பல் படை டீமுக்கு தெரிய வர, அந்த டீமுக்காக ஆடினார். அதன் கோச், ஆஷம் கான், உற்சாகப்படுத்தினார். உற்சாகம் ஓவராக, வேலையை உதறினார். முழு நேர கிரிக்கெட்டுக்கு என்ன செய்யலாம் என, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் யூனிஸ்கானிடம் ஆலோசனை கேட்டார் ஜமான். அவர், ’உன் சொந்த ஏரியாவுல போய் விளையாடு’ என அட்வைஸ் பண்ண, அது பயன் தந்தது. உள்ளூர் மற்றும் பிராந்திய அளவிலான போட்டிகளில் கவனிக்கப்பட்டார். பிறகு பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்துவிட்டார். கடந்த 7-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டிதான் ஜமானுக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி.
’நேத்து எனக்கு உடம்பு சரியில்லை. சரியா ஆடுவேனான்னு சந்தேகம். இருந்தாலும் உள்மனசு ஏதோ சொல்லிட்டே இருந்தது. அதன்படி விளையாடினேன். ஒர்க் அவுட் ஆச்சு’ என்கிறார், பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாகி இருக்கும் ஜமான்.