ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், நடப்பு சீசனில் அதிகமாக ட்விட்டரில் பேசப்பட்ட அணி மற்றும் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட வீரர் யார் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இறுதிப்போட்டியில் மோதிய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிகமாக ட்விட்டரில் பேசப்பட்ட அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் கூட இடம்பெறவில்லை.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் 2வது தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து இந்த முறையும் ஈ சாலா கப்பை தவறவிட்ட “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” அணிதான் நடப்பு சீசனில் அதிகமாக ட்விட்டரில் பேசப்பட்ட அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த முறையும் “இதயங்களை” மட்டுமல்லாது அதிக ட்வீட் செய்யப்பட்ட அணியாகவும் மாறியுள்ளது.
நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆம் இடத்திலும், 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஆம் இடத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு சீசனில் பிளே ஆஃப் போட்டிகளுக்கு கூட தகுதி பெறாமல், லீக் ஆட்டங்களுடன் நடையைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 5வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளன. நடப்பு சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி 6வது இடத்தை பிடித்துள்ளது.
அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார். 3வது இடத்தில் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மாவும் 4வது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர். நடப்பு சீசனில் இவர்கள் நால்வரும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடாத போதும், ரசிகர்களின் பேச்சு இவர்களை சுற்றியே இருந்துள்ளது.