தோனி உள்ளிட்ட 6 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று ஐபிஎல் பயிற்சிக்காக விமானம் மூலம் சென்னை வந்தனர். அப்போது விமானத்தில் குழுவாக அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் யாரும் மாஸ்க் அணியவும் இல்லை தனிமனித இடைவெளியும் இல்லை என்பதால் இப்போது அது சர்ச்சையாகி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தோனி புறப்பட்டு நேற்று மாலை சென்னை வந்தார். மேலும், சுரேஷ ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்களும் நேற்று சென்னை வந்தனர். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து அனைத்து அணிகளும் அதற்கான பயிற்சிகளை தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் மாதமே துபாய் புறப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் உள்ளே தோனி உள்ளிட்ட 6 சிஎஸ்கே வீரர்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமல் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இந்தக் குழு புகைப்படம் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. தோனியைப் பொறுத்தவரை அவர் ராஞ்சி விமான நிலையம் தொடங்கி சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் புகைப்படங்களில் மாஸ்க் அணிந்தே காணப்படுகிறார். ஆனால் குழுவாக இருக்கும் புகைப்படங்களிலும், சுரேஷ் ரெய்னா எடுத்துள்ள செல்பி புகைப்படங்களிலும் அவர் மாஸ்க் அணியவில்லை. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் "அருமையான தனிமனித இடைவெளி", மாஸ்க் எங்கே "பாஸ்", "தனிமனித இடைவெளி கிலோ என்ன விலை" என கலாய்த்து வருகின்றனர்.