தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
"ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ" இணையதளத்துக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ் "நான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கியபோது, ஆடுகளத்தை கணிப்பதில் தடுமாறினேன். ஆனால் தோனியுடன் விளையாட ஆரம்பித்தவுடன் எனக்கு ஆடுகளம் குறித்து சரியான புரிதல் ஏற்பட்டது. அவர் நான் பந்துவீசும்போது ஆலோசனைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் "தோனிக்கு பீல்டர்களை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். நான் பவுலிங் செய்யும்போது அவர் கீப்பிங் செய்யும்போது அதைச் சரியாக புரிந்துக்கொண்டு பீல்டிங்கை அமைப்பார். பேட்ஸ்மேனை அவுட்டாக்குவதும் எளிதாக இருக்கும். எனக்கும் கவலையில்லை" என்றார் குல்தீப் யாதவ்.