உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இதுவரை மழையால் மூன்று போட்டிகள் ரத்தாகியுள்ளது. அத்துடன் இனிவரும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், இந்தியா- நியூசிலாந்து மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளிலும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை பெய்தால் உலகக் கோப்பை விதிகள் என்ன சொல்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
போட்டியை எப்போது ரத்து செய்யலாம்?
ஐசிசி விதிகளின் படி ஒரு ஒருநாள் போட்டிக்கு அதன் தொடக்கத்திலிருந்து 8 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மழை நின்று மைதானத்தில் விளையாடும் சூழல் அமைந்தால் போட்டி நடைபெறும். உதாரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரின் அதிக போட்டிகள் இங்கிலாந்து நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறுகிறது.
இதனால் இந்தப் போட்டிகளின் போது மழை பெய்தால் மாலை 6.30 மணிவரை காத்திருக்கவேண்டும். இதன்பிறகு நடுவர்கள் போட்டியை நடுவத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதேபோல போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தால் போட்டி தொடங்கும் நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை காத்திருந்த பிறகு நடுவர்கள் போட்டியை ரத்து செய்யலாம்.
மழையால் ரத்தான போட்டிகளுக்கு ரிசர்வ் தினங்கள் உள்ளதா?
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ் தினங்கள் இல்லை. இதனால் லீக் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ் நடக்கவில்லை என்றால் இந்தப் போட்டி டிராவாக கருதப்படுகிறது. அதேபோல போட்டி தொடங்கவில்லை என்றால் அந்தப் போட்டியில் விளையாடும் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால் 2ஆவது இன்னிங்ஸ் நடைபெற்றால், அப்போது டக்வொர்த் லூயீஸ் முறைப்படி ஆட்டத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் லீக் போட்டிகளில் மழை குறுக்கிட்டால், போட்டியை நடத்த கூடுதலாக 75 நிமிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் போட்டியின் நடுவர் நினைத்தால் 75 நிமிடங்களுக்கு மேலும் போட்டியை நடத்தலாம்.
உலகக் கோப்பையில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு மட்டும் ரிசர்வ் தினங்கள் உள்ளன. அரை இறுதி போட்டிகளில் மழை கூறுக்கிட்டால் இந்தப் போட்டிகள் ரிசர்வ் நாட்களில் தொடரும். ஆனால் ரிசர்வ் நாட்களிலும் அரை இறுதி போட்டிகள் நடத்த முடியவில்லை என்றால் லீக் சுற்று அல்லது கால் இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி முதலில் இருந்ததோ அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அதேபோல இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால், இந்தப் போட்டி ரிசர்வ் நாளில் தொடர்ந்து நடைபெறும். அதேசமயம் ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால், இரு அணிகளும் உலகக் கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள்.
மழையால் பாதித்த போட்டியில் எப்போது சூப்பர் ஓவர் விளையாடப்படும்?
பொதுவாக சூப்பர் ஓவர் முறை டி20 போட்டிகள் சமனில் முடிவடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க பயன்படுத்தப்படும். உலகக் கோப்பையில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் முறை மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி வானிலை சூழ்நிலைகள் அனுமதித்தால் சூப்பர் ஓவர் போட்டி நாள் அன்று அல்லது ரிசர்வ் நாளில் நடைபெறும். இதனை நடத்துவது குறித்து போட்டியின் நடுவர் முடிவு செய்வார். இந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளுக்கும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஒரு ரிவ்யூ வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.