பலம் வாய்ந்ததா குரேஷிய அணி..?

பலம் வாய்ந்ததா குரேஷிய அணி..?
பலம் வாய்ந்ததா குரேஷிய அணி..?
Published on

உலகக்கோப்பை மணிமகுடத்துக்காக பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் குரேஷிய கால்பந்து அணியின் பலம் என்ன என்பதை காணலாம்.

'ஹிர்வஸ்கா' அணி ஹிர்வஸ்கா. இந்தப் பெயரை குரேஷிய அணியினரின் உடையில் பார்க்கலாம். இதுதான் குரேஷிய நாட்டிற்கு சொந்த மொழியில் சூட்டப்பட்ட பெயர். இதற்கு முன் இல்லாத அளவுக்கு, உலகக்கோப்பையில் குரேஷிய அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பயிற்சியாளர் ஸ்லாட்கோ டேலிச் வெற்றியை குறிவைக்கும் சில வித்தியாசமான ஆட்ட உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளார். டேலிச்சின் அணுகுமுறை காரணமாக கடந்த 50 நாட்களாக வீரர்கள் அனைவரும் ஓரே குடும்பத்தினரை போன்று பழகி வருவதாக குரேஷிய அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் கூடுதல் நேரம் வரை விளையாடியிருக்கின்றனர் அவர்கள். அந்த மூன்று போட்டிகளிலும் சரிவிலிருந்து மீண்டு சாதித்திருக்கின்றனர். கூட்டு முயற்சியில் வெற்றியை ஈட்டும் ஆட்டவேகத்தை குரேஷிய வீரர்களிடம் அதிகமாகவே காண முடிகிறது.

அனுபவ வீரர்கள் பலர் உள்ளதும் குரேஷிய அணிக்கு பெரும்பலமாக ‌உள்ளது. ரியல் மேட்ரிட், பார்சிலோனா, இண்டர் மிலன், யுவண்டஸ், லிவர்பூல் போன்ற பெரிய கிளப்புகளில் விளையாடும் வீரர்கள் குரேஷிய அணியில் உள்ளனர். கேப்டன் மோட்ரிச் , மண்ட்சூகிச் , ராகிடிச் , பெரிசிச் , கோவாசிச் , லோவ்ரோன் ஆகிய வீரர்கள் கிளப் போட்டிகளில், களமிறங்கும் லெவனில் இடம்பெற்ற வீரர்களாக உள்ளனர். குரேஷிய வீரர்களின் சராசரி வயது 27ஆக உள்ளது. இத்தகைய அனுபவ பலத்தால் தன்னம்பிக்கை மிகுந்த அணியாக குரேஷியா உள்ளது.

நாக் அவுட் சுற்றுகளில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் குரேஷிய வீரர்கள் சரிவிலிருந்து மீண்டு சாதித்துக் காட்டியுள்ளனர். டென்மார்க் அணியுடனான நாக் அவுட் சுற்றில் குரேஷிய அணி போராடி வென்றது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே டென்மார்க் வீரர் மத்தாயஸ் ஜோர்ஜென்சன் கோல் அடித்து குரேஷியாவுக்கு ‌அதிர்ச்சியளித்தார். 4 ஆவது நிமிடத்தில் மரியோ மண்ட்சூகிச் பதில் கோல் அடித்து சமன் செய்தார். பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்த அந்தப்போட்டியில் குரேஷிய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வென்றது. ரஷ்ய அணியுடனான காலிறுதிப் போட்டியும் டைபிரேக்கர் வரை நீடித்தது. பெனால்டி ஷூட் அவுட்டில் நான்கிற்கு மூன்று என்ற கோல்கள் கணக்கில் குரேஷிய அணி வெற்றியை ஈட்டியது.

இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியிலும் குரேஷிய அணி பெரும் போராட்டம் நடத்தியே வெற்றியை ருசித்தது. இந்தப்போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் டிரிப்பியர் ஃப்ரி கிக் வாய்ப்பில் கோல்‌ அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். 68 ஆவது நிமிடத்தில் குரேஷிய வீரர் இவான் பெரிசிச் கோல் அடித்து சமன் செய்தார். போட்டி முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இ‌ருந்ததால் கூடுதல் நேரம்‌ ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் தமது அனுபவ ஆற்றலை பயன்படுத்தி மரியோ மாண்ட்சூகிச் அடித்த கோலால், குரேஷிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.கடைசி நிமிடம் வரை போராடும் ஆற்றல் படைத்த குரேஷிய அணி இறுதிப்போட்டியில், ஃபிரான்ஸ் அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com