வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஆரம்பமாக உள்ளது 2020க்கான ஐபிஎல் தொடர்.
அதற்காக இந்த தொடரில் விளையாட உள்ள எட்டு அணி வீரர்களும் துபாயில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஏழு இந்திய வீரர்கள் என பதினோரு பேர் கலந்து விளையாடுவது ஐபிஎல் போட்டிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற வழக்கம்.
ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர்.
பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் குதிரை ரேஸில் ஓடும் பந்தய குதிரைகளாக இருந்தாலும் அதில் ஜெயிக்கின்ற குதிரையாக ஜொலிப்பவர்கள் தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தாங்கள் இடம் பெற்றுள்ள ஐபிஎல் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுபவர்கள்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இல்லாமல் எந்தவொரு ஐபிஎல் அணியுமே இருக்காது. அந்தளவிற்கு ஆட்டத்தையே திசை திருப்பும் சக்தி படைத்தவர்கள்.
அப்படி ஐபிஎல் தொடரில் மேட்ச் வின்னர்களாக ஜொலிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் யார் யார்?
பொல்லார்ட் - மும்பை இந்தியன்ஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி இருபது ஓவர்களில் 197 ரன்களை குவித்திருந்தது. இமாலய டார்கெட்டை எதிர்கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களில் வெறும் 62 ரன்களை மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பொல்லார்ட் 31 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.
பந்தை காட்டுத்தனமாக அடிக்கின்ற பேட்ஸ்மேன்களில் பொல்லார்ட் ஒருவர். சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் ஆக்டிவாக விளையாடுவர். அணிக்கு தேவைப்படும் போது பந்து வீசி விக்கெட் வீழ்த்துவார். பவுண்டரி லைனில் நின்று ஸ்பைடர் மேன் போல பந்தினை கேட்ச் பிடிப்பார்.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் ஆட்டங்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 146.77.
ஆண்ட்ரு ரஸ்ஸல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
‘பீஸ்ட் மோட்’ என்றால் அது ரஸ்ஸல் தான். 2014 ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரஸ்ஸல் கிரிக்கெட் விளையாட்டில் ராட்சசன். கடத்த மூன்று சீசன்களாக ரஸ்ஸலின் ஆட்டம் ஐபிஎல் தொடரில் வேற லெவல். ஒற்றையாளாக போராடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வித்தைக்காரர்.
கடந்த சீசனில் மும்பை அணியுடனான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா 232 ரன்களை குவித்திருக்கும். அதில் வெறும் 40 பந்துகளில் 80 ரன்களை குவித்து அமர்க்களம் செய்திருப்பார் ரஸ்ஸல். இந்த போட்டி அவரது ஆட்டத்திற்கு வெறும் சேம்பிள் தான். ஐபிஎல் தொடரில் ரஸ்ஸலின் ஸ்ட்ரைக் ரேட் 186.41. பவுலிங்கிலும் ரஸ்ஸல் அசத்துவார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனும் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அசத்துவார்.
பிராவோ - சென்னை சூப்பர் கிங்ஸ்
அதிகளவில் டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ள வீரர் பிராவோ. ஆல் ரவுண்டரான இவர் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசனில் மும்பை அணிக்காக விளையாடியவர். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பந்தை வெறிகொண்டு க்ளீன் ஹிட் செய்யும் சர்வதேச பேட்ஸ்மேன்களில் ஒருவர். டீசண்ட்டாக பந்து வீசி விக்கெட் வேட்டையும் ஆடுவார். ஐபிஎல் தொடரில் 1483 ரன்களை அடித்துள்ள அவர் 147 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சென்னை அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை பிராவோ.
2018 சீசனில் மும்பை அணிக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்களை விளாசியிருப்பார். சென்னை அணிக்கு அதில் கிடைத்த வெற்றி அந்த சீசனில் சென்னை சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவியது.
இதே போல பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், ராஜஸ்தான் அணிக்காக ஓஷோ தாமஸ், டெல்லி அணிக்காக ஹெட்மயர் மற்றும் கீமோ பால் ஆகியோரும் விளையாட உள்ளனர்.