"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல" - பிசிசிஐ தகவல் !

"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல" - பிசிசிஐ தகவல் !
"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல" - பிசிசிஐ தகவல் !
Published on

ஐபிஎல் போட்டிகள் தாமதமாவதன் காரணமாகச் செலவைக் குறைத்திருக்கிறோமே தவிர வீரர்களின் சம்பளத்தைக் குறைக்கவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இது குறித்து "மிட் டே" நாளிதழுக்கு அண்மையில் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "எங்களுடைய நிதி நிலை குறித்து நாங்கள் ஆராய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை என்றால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்படும். இதனைச் சமாளிக்க வீரர்களின் சம்பளப் பணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஆனால் போட்டிகள் நடந்தால் இதுபோன்ற பிடித்தங்கள் இருக்காது" என்றார்.

இப்போது "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு" பேட்டியளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் "பிசிசிஐ தன்னுடைய செலவு குறைக்கும் திட்டத்தைக் கடந்தாண்டு அக்டோபரிலிருந்தே தொடங்கிவிட்டது. அதாவது கொரோனா பாதிப்புக்கு முன்னமே செலவு குறைப்புகளைச் செயல்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு வீரர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆடம்பரச் செலவுகளை மட்டுமே குறைத்துள்ளோம். ஐபிஎல் நடைபெறாமல் போனால் பெரும் இழப்புதான். ஆனால் போட்டியை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com