அம்பயர் டேரில் ஹார்பரிடம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கோபப்பட்டு கூறிய வார்த்தைகளை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்த டேரில் ஹார்பருக்கும், தோனிக்கும் இடையே சிறு உரையாடல் ஏற்பட்டது. அது குறித்து இப்போது மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் டேரில் ஹார்பர்.
ஸ்டீவ் பக்னர் போல சச்சின் டெண்டுல்கருக்கும் டேரில் ஹார்ப்பர் தவறான அவுட் கொடுத்துள்ளார். இப்போது "ஏசியாநெட் நியூஸபிள்" ஊடகத்துக்கு பேசிய அவர் "2011 டெஸ்ட் போட்டியின்போது வேகப்பந்துவீச்சாளர் பிரவீண் குமார் தொடர்ந்து பிட்சின் முக்கியப் பகுதியை கால்களால் பவுலிங் போடும்போது சேதப்படுத்தி வந்தார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது" என்றார்.
மேலும் "தொடர்ந்து அவர் சேதப்படுத்தியதன் காரணமாக அவருக்கு டெஸ்ட் போட்டி முழுவதும் பவுலிங் போட தடை விதித்தேன். இதுதொடர்பாக தோனி என்னிடம் வந்து 'பிரவீண் குமாருக்கு இதுதான் முதல் டெஸ்ட் கொஞ்சம் கருணை காட்டலாமே'என்றார். ஆனால் பிரவீண் குமார் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவிட்டார்" என்றார் ஹார்ப்பர்.
தொடர்ந்து பேசிய ஹார்ப்பர் " பின்பு தோனி என்னிடம் வந்து 'உங்களிடம் ஏற்கெனவே எங்களுக்கு பிரச்னை இருக்கிறது'என்றார். ஆனால் நான் சிரித்துக்கொண்டே லெக் அம்பயர் திசை நோக்கி நகர்ந்துவிட்டேன். நான் மரியாதைக்குறிய பதிலை தோனிக்கு தரவில்லை என நினைக்கிறேன். தோனி அவ்வாறு சொன்னதற்கு காரணம் 2000 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேவில் பந்து வீசிய ஆசிஷ் நெஹ்ராவுக்கு இதேபோன்ற செயலுக்காக இதேபோன்ற தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த தண்டனை வழங்கிய அம்பயரும் நான்தான் என்பதால் அவர் இவ்வாறு சொல்லி இருக்கலாம்" என்றார்.