‘சென்னை எக்ஸ்பிரஸ் இல்ல... சென்னை மெயில்’ - சென்னை அணியை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்

‘சென்னை எக்ஸ்பிரஸ் இல்ல... சென்னை மெயில்’ - சென்னை அணியை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்
‘சென்னை எக்ஸ்பிரஸ் இல்ல... சென்னை மெயில்’ - சென்னை அணியை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்
Published on

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் மெதுவாக ரன்களை சேர்த்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமாக ஆகாஷ் சோப்ரா கண்டித்துள்ளார்.

நடப்பு சாம்பியனான சென்னை அணி தற்போது நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் தடுமாறி வருகிறது. தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியநிலையில், ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பதவியேற்றார். ஆனால், அவர் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றது. மேலும் கேப்டன் பொறுப்பு அழுத்தத்தால், ஜடேஜா தனது பார்மை இழந்து திணறிவந்தார்.

இதையடுத்து மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற நிலையில், வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என எண்ணப்பட்டநிலையில், தொடர்ந்து அந்த அணி தோல்வியை சந்தித்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 62-வது லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கில் களமிறங்கி விளையாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களே எடுத்தது.

இதையடுத்து எளிய இலக்கை சேஸ் செய்த குஜராத் அணி, 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது யூ-டியூப் சேனலில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியை மெதுவாக பேட்டிங் செய்ததற்காக, பேட்டிங்கின்போது தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளதுடன், சென்னை மெயில் என்று வர்ணித்துள்ளார்.

வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "சிஎஸ்கே டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, ஆனால் பேட்டிங்கின்போது அந்த அணி ரன்கள் சேர்த்து நகராமல் அப்படியே இருந்தது. அந்த அணியை நாங்கள் சென்னை எக்ஸ்பிரஸ் என்று அழைப்போம். ஆனால் இப்போது அது சென்னை மெயில். ஏனெனில், அதிரடியாக ரன்களை குவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “ருதுராஜ் கெய்க்வாட் (49 பந்துகளில் 53 ரன்கள்) மற்றும் நாராயண் ஜெகதீசன் (33 பந்துகளில் 33 ரன்கள்) ஆகியோர், அணியின் தேவையை உணர்ந்து ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடாமல் பொறுமையாக விளையாடியதால், அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்தது. ரன்கள் எடுத்த வேகம் போதுமானதாக இல்லை. வேகமாக ரண்கள் எடுக்கவேண்டும் ” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிரணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்த அவர், குஜராத் அணியின் விருத்திமான் சாஹாவைப் பாராட்டினார். “எம்எஸ் தோனி கூறியதுப் போன்று, 20 ஓவர்களுக்கு பேட் செய்யும்போது, 145 ரன்களைக் கூட எடுக்கவில்லை என்றால், அது கொஞ்சம் பிரச்சனையாக இருக்கத்தான் செய்யும். 5 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் போதுமானது இல்லை. ஆனால், குஜராத் அணியில் விருத்திமான் சாஹா, கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார்.

"சென்னை அணி இந்த சீசனில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, வெறும் எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். சென்னை அணிக்கு மறக்க முடியாத ஒரு மோசமான சீசன் இது. மோசமான 2020 சீசனில் கூட, அவர்கள் இறுதியில் ஆறு வெற்றிகளைப் பதிவு செய்தனர். ஆனால் இந்த முறை அந்த 6 வெற்றி கூட இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. உண்மையில், சென்னை அணிக்கு இந்த சீசன் மறக்கமுடியாத சீசன்” என்று தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்தப் பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, மைதானம் தொடக்கத்தில் பேட்டிங் செய்ய சவாலாக இருந்தது என்பதையும், முதலில் பேட் செய்யத் தேர்ந்தெடுத்தது தவறு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com