இந்திய ஏ கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிகளை வீழ்த்தி இந்திய ஏ அணி தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து, தற்போது, அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. முதல் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோதும் நான்கு நாள் போட்டி வொர்சஸ்டரில் நடந்தது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
கருண் நாயர் தலைமையிலான இந்தப் போட்டியில் இவர்கள் தவிர, பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட், ஜெயந்த் யாதவ், நதீம், ராஜ்புத், சைனி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இங்கிலாந்து லயன்ஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 423 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய ஏ அணி, 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இந்த தொடரில் ஒருநாள் மற்றும் 4 நாட்கள் போட்டியில் நாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வென்று, ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை நிரூபித்துள்ளோம். இந்த தொடரில் ஒரு பயிற்சியாளராக நிறைய கற்றுக்கொண்டேன். சில இக்கட்டான சூழல்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இங்கு வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில் அது வெளிப்படுகிறது. வெளியிலிருந்து நெருக்கடி இல்லையென்றால் நம் அணியால் சிறப்பான முடிவுகளை கொடுக்க முடியும்” என்றார்.