ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த ஐதரபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. தவான் 49 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 39 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர்.
180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு வாட்சன், அம்பத்தி ராயுடு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். வாட்சன் 57 ரன்களிலும், ரெய்னா 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய ராயுடு 62 பந்துகளில் அபார சதமடித்தார். இதையடுத்து 19 ஓவர்களிலேயே வெற்றியை எட்டியது சிஎஸ்கே. ராயுடு 100 ரன்களுடனும், கேப்டன் தோனி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயுடுவுக்கு இது, முதல் ஐபிஎல் சதம் ஆகும். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறும்போது, ‘டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. ரசித்து ஆடுகிறேன். மைதானத்துக்குள் எந்த ரகசியமும் இல்லை. வாட்சனும் நானும் எந்த பந்தை எப்படி அடிக்கலாம் என்று பேசிக்கொண்டே விளையாடினோம். வாட்சன் எனக்கு உதவி செய்தார். சில ஆலோசனைகளைச் சொன்னார். நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் நீங்கள் சிறப்பாக விளையாடினால், எந்த வரிசையில் இறங்கியும் ஆட முடியும். அதனால் எந்த வரிசையிலும் என்னால் சிறப்பாக ஆட முடியும். இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கும் சிறப்பாக விளையாடுவேன்’ என்றார்.
சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும்போது, ’ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒன்று அல்லது இரண்டு பேர் கண்டிப்பாக கடைசி வரை நின்று அடித்து ஆட வேண்டும். ராயுடு அதைச் சிறப்பாக செய்கிறார். வாட்சன், ரெய்னா, தோனியும் சிறப்பாக அதை தொடர்கிறார்கள்’ என்றார்.