ஐ.பி.எல் என்றாலே பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை பறக்கவிடுவதும் அதை ஃபீல்டர்கள் லாவகமாக டைவ் அடித்து தடுப்பது என நொடிக்கு நொடி திரில்லுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
அதிலும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிகம் அறிமுகமில்லாத வீரர்கள் பட்டாசாக வெடித்து சிதறி தங்களது திறனை நிரூபிப்பதும் ஐ.பி.எல் களத்தில் தான். அந்த ஆட்டத்திறனின் மூலம் சர்வதேச அளவில் விளையாடவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
விராட் கோலி தலைமையிலான இன்றைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களான ஜடேஜா, பும்ரா, பாண்டியா, சாஹர் என பலர் ஐ.பி.எல் தொடர் மூலமாக அடையாளம் காணப்பட்டவர்கள் தான்.
2020க்கான ஐ.பி.எல் சீசனிலும் அப்படி விளையாடி சாதிக்க உள்ள இளம் வீரர்கள் (UNCAPPED PLAYERS) குறித்த ஒரு பார்வை…
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ்
கடந்த 2019இல் இளம் வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் உலக மீடியாவின் ரேடார் பார்வைக்குள் வந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். மும்பையை சேர்ந்த பதினெட்டு வயது வீரரான இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பட்டையை கிளப்பியவர்.
மொத்தமாக அந்த தொடரில் 400 ரன்கள் அடித்து அதிக ரன்களை ஸ்கோர் செய்த வீரர் என அதகளப்படுத்தியவர் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
ரவி பிஷோனி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
வலது கை லெக் ஸ்பின்னரான ரவி பிஷோனி இந்தியாவுக்காக அண்டர் 19 உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த தொடரின் லீடிங் விக்கெட் டேக்கரும் கூட.
அஷ்வின் டெல்லி அணிக்கு சென்றுள்ள நிலையில் பஞ்சாப் அணியின் ஆஸ்த்தான சுழற்பந்து வீச்சாளராக கூடா பிஷோனி பந்து வீச வாய்ப்புள்ளது. அனில் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் துபாய் பிட்சில் பிஷோனி ஒரு ரவுண்டு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குறிப்பாக ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்காத எக்கானமி பவுலர்களில் பிஷோனியும் ஒருவராக இருக்க கூட வாய்ப்புகள் உள்ளன.
அப்துல் ஸமாத் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பதினெட்டு வயதான அப்துல் ஸமாத் ஆல் ரவுண்டர். பேட்ஸ்மேன், லெக் ஸ்பின்னர் என பன்முக திறமை கொண்டவர்.
முதல் தர போட்டிகளில் அதிரடியாக பந்துகளை அடித்து நொறுக்கி ரன் வேட்டை ஆடும் வல்லமை படைத்தவர். எட்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 125. டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.36.
ஆரஞ்சு ஆரமியான சன்ரைசர்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி ஒரு காட்டு காட்ட வெயிட்டிங்கில் உள்ளார் அப்துல் ஸமாத்.
இதே போல தேவ்துத் படிக்கல் (ஆர்.சி.பி), விராத் சிங் (சன்ரைசர்ஸ்), சாய் கிஷோர் (சி.எஸ்.கே), சித்தார்த் (நைட் ரைடர்ஸ்) மாதிரியான வீரர்களும் இந்த ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளை அப்செட் செய்யும் வீரர்களாக விளையாட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.