எல்.பி.டபிள்யூவா, ரன் அவுட்டா? - மயங்க் அகர்வால் விக்கெட்டில் குழப்பம்

எல்.பி.டபிள்யூவா, ரன் அவுட்டா? - மயங்க் அகர்வால் விக்கெட்டில் குழப்பம்
எல்.பி.டபிள்யூவா, ரன் அவுட்டா? - மயங்க் அகர்வால் விக்கெட்டில் குழப்பம்
Published on

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலின் விக்கெட் இழப்பு, குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று துவங்கியது.

இந்திய அணியில் ஜெயந்த் யாதவிற்கு பதிலாக, அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இந்நிலையில், 2-வது ஓவரில் மிகப் பெரிய குழப்பம் நிலவியது. 2-வது ஓவரை இலங்கை அணி வீரர் பெர்னாண்டோ வீசினார். இதில் 4-வது பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொண்டார்.

அப்போது பந்து, மயங்க் அகர்வாலின் பேடில் பட, அதற்கு இலங்கை வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு அம்பயரிடம் முறையிட்டனர். ஆனால் அம்பயர் அனில் சௌத்ரி அவுட் கொடுக்கவில்லை. இதற்கிடையே, அந்த பந்து கவர் திசையில் செல்ல, அதற்கு மயங்க் ரன் ஓடினார். முதலில் மறுத்த ரோகித், மயங்க் ஓடி வந்ததால் ரன் எடுக்க ஓட முயன்றார்.

ஆனால் பாயிண்டில் நின்ற ஜெயவிக்ரமா, பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் எறிந்தார். இதனை கவனித்த ரோகித் ரன் எடுக்க ஓடவில்லை. அப்போது மயங்க் அகர்வால் நடு பிட்சில் நின்றிருந்ததால், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, எவ்வித அவசரமும் காட்டாமல், நடுவரிடம் ரிவ்யூ முறையிட்டுவிட்டு, அதன்பிறகு தனது கையில் இருந்த பந்தை வைத்து பொறுமையாக மயங்க் அகர்வாலை ரன் அவுட் ஆக்கினார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் முதலில் ரிவ்யூ எடுக்க முற்பட்டபோது, அது நோ பால் எனத் தெரிய வந்தது. மயங்க் அகர்வால் ரன் எடுக்க ஓடாவிட்டால், அந்த எல்.பி.டபிள்யூவிற்கு இலங்கை வீரர்கள் ரிவியூ எடுத்திருந்தால் கூட, அது நோ பால் என்பதால், மயங்க் அகர்வால்  அவுட்டாகியிருக்கமாட்டார். 

இலங்கை வீரர்கள் எல்.பி.டபிள்யூவிற்கு ரிவியூ கேட்டுவிட்டு பின்னர் ரன் அவுட் செய்தனர். இதனால் இது டெட் பால் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இது ரன் அவுட் தான் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவசரப்பட்டு ரன் ஓடி மயங்க் அகர்வால் 4 ரன்களில் அவுட்டானார்.

இந்தப் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 92 எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இலங்கை அணி 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com