கேட்ச் பிடிக்கும்போது கீழே தெறித்து விழுந்த 4 பற்கள்.. ரத்தம் வழிய வெளியேறிய இலங்கை வீரர்!

கேட்ச் பிடிக்கும்போது கீழே தெறித்து விழுந்த 4 பற்கள்.. ரத்தம் வழிய வெளியேறிய இலங்கை வீரர்!
கேட்ச் பிடிக்கும்போது கீழே தெறித்து விழுந்த 4 பற்கள்.. ரத்தம் வழிய வெளியேறிய இலங்கை வீரர்!
Published on

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் கேட்ச் பிடிக்கச் சென்று, 4 பற்களை இழந்ததுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளம் வீரரான சமிகா கருணாரத்னே மைதானத்தில் இருந்து வெளியேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 தொடர் போன்று, இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. விளையாட்டு போட்டி தான் என்றாலும், காயங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று மைதானத்தில் நடந்த சம்பவம்தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடந்த 4-வது போட்டியில், கல்லி கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கல்லி கிளேடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15 ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.

முதல் இன்னிங்சின்போது, 4-வது ஓவரில் கண்டி அணியைச் சேர்ந்த கார்லெஸ் பிராத்வெய்ட் வீசிய பந்தை, கல்லி அணியைச் சேர்ந்த நுவனிந்து ஃபெர்ணான்டோ கவர் திசையில் பந்தை தூக்கி அடித்தார். இதனை கேட்ச் பிடிக்க 3 வீரர்கள் ஓடினர். அப்போது பின்புறமாக ஓடிய சமிகா கருணாரத்னே பந்தை பிடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவரின் வாயில் வேகமாகப் பந்து பட்டது. இதில் அவரது 4 பற்கள் கீழே தெறித்து விழுந்து வாயிலிருந்து ரத்தம் சொட்டியது.

எனினும், பந்தை பேலன்ஸ் செய்து, கேட்ச் பிடித்தார் சமிகா கருணாரத்னே. அப்போது உடன் இருந்த வீரர்கள் அவரை ஆறுதல் படுத்திக்கொண்டே வந்தனர். இதையடுத்து ஓடிவந்த மருத்துவக் குழு உடனடியாக அவரை மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு வற்புறுத்தியதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் சமிகா கருணாரத்னே தொடர்ந்து விளையாடுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com