‘ஷாக் ஆன நீஷம்’ - ஆட்டத்தை மாற்றிய தோனியின் மிரட்டல் ‘ரன் அவுட்’

‘ஷாக் ஆன நீஷம்’ - ஆட்டத்தை மாற்றிய தோனியின் மிரட்டல் ‘ரன் அவுட்’
‘ஷாக் ஆன நீஷம்’ - ஆட்டத்தை மாற்றிய தோனியின் மிரட்டல் ‘ரன் அவுட்’
Published on

நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நீஷமை தன்னுடைய சமயோஜித புத்தியால் விக்கெட் கீப்பர் தோனி அசத்தலாக ரன் அவுட் செய்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை ராயுடு 90 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல், விஜய் சங்கர் 45, பாண்ட்யா 45, கேதர் ஜாதவ் 34 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில், சாஹல் 3, பாண்ட்யா 2, சமி 2 விக்கெட் எடுத்தனர். 

இந்தப் போட்டியில் தோனி செய்த நீஷமின் ரன் அவுட் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. ஒருகட்டத்தில் நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. 175 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீஷம் திடீரென அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 2 சிக்ஸர்களையும் விளாசினார். இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இந்நிலையில், 37வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். அப்போது நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்திருந்தது. நீஷம் 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். அந்த ஓவரில் இரண்டாது பந்தை நீஷம் எதிர்கொண்டார். பந்தில் பேடில் பட்டு, பின்னர் உருண்டோடி ஸ்டம்பிற்கு பின்னே சென்றது.

தோனி, கேதர், சாஹல் உள்ளிட்ட எல்லோரும் எல்.பி.டபிள்யூ கேட்டனர். தோனி அவுட் கேட்டுக் கொண்டே பந்தினை எடுக்கச் சென்றார். நீஷம் ஏமாந்த நேரம், பந்தினை லாவகமாக ஸ்டம்பை நோக்கி அடித்தார். ஸ்டம்பை அடித்த வேகத்தில் தோனி, உற்சாகத்தில் துள்ளி குதித்தார். யாருமே இந்த விக்கெட்டை எதிர்பார்க்கவில்லை. நீஷம் விக்கெட்டை அடுத்து நியூசிலாந்து அணி 217 ரன்னில் சரணடைந்தது. 

இன்றையப் போட்டியில் தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும், பீல்டிங்கில் ரோகித் சர்மாவுக்கு தொடர்ச்சியாக ஆலோசனைகளை கூறி வந்தார். தோனி பேட்டிங்கில் ஏமாற்றினாலும், ஸ்டம்பிற்கு பின்னால் தன்னுடைய பணியால் அசத்திவிட்டார். வழக்கமாக, தோனியின் ஸ்டம்பிங் ஸ்பெஷலாக இருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் நீண்ட நாட்களுக்கு அற்புதமான ரன் அவுட் செய்து அசத்தியுள்ளார். தோனியின் இந்த அசத்தலான ரன் அவுட்டை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

வழக்கமாக எவ்வளவு பெரிய விக்கெட்கள் எடுத்தாலும் தோனி மிகவும் அமைதியாகவே இருப்பார். அதனால்தான் அவரை கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். ஆனால், இன்றையப் போட்டியில் ரன் அவுட்டை தோனி துள்ளி குதித்து கொண்டாடியது களத்தில் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. தோனி இதுபோல் விக்கெட்டை கொண்டாடுவது மிகவும் அரிதான ஒன்று. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com