ரஞ்சிப் போட்டிகளில் அதிக ரன் குவித்து வாசிம் ஜாபர் சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், வாசிம் ஜாபர். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜாபர், இப்போது முதல் தரப் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
40 வயதாகும் ஜாபர் கடந்த 18 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இப்போது விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி மற்றும் இரானி கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில், விதர்பா அணியும் பரோடா அணியும் நாக்பூரில் மோதி வருகிறது. இந்தப் போட்டியில், விதர்பா அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 529 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பெய்ஸ் ஃபஸல் 151 ரன், வாசிம் ஜாபர் 153 ரன், விக்கெட் கீப்பர் அக்ஷய் வட்கர் 102 ரன் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் வாசிம் ஜாபர் 97 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் முதல் தரப்போட்டியில் 53 சதங்களும் 87 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.