தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று ஆடிவருகிறது. 2-1 என்று டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.
இந்நிலையில் 3ஆவது டி20 போட்டியில் பங்குபெற்று விளையாடிய தீபக் சாஹருக்கு முதுகில் சிறிய காயம் ஏற்பட்டதால் முதல் ஒரு நாள் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் இந்திய அகாடமிக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க அனுப்பி வைக்கப்பட உள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முழு தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதனால் தீபக் சாஹருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பெயரை இந்திய அணியின் தேர்வு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் உலககோப்பைக்கான மாற்றுவீரர் பட்டியலில் தீபக் சாஹர் இருப்பதால், அவர் இந்திய தேசிய அகாடமியில் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற உள்ளது மற்றும் 3ஆவது போட்டி 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.