ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னைக்கு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குடும்பத்தினர் மட்டுமின்றி நெருங்கிய நண்பர்களும் உறவினர்கள் அவரை வரவேற்றனர். கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் வாஷிங்டன் சுந்தரின் வருகை கொண்டாடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2017-இல் அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். ஐபிஎல் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான வீரர்களில் அவரும் ஒருவர். அதனால் தேர்வாளர்கள் அவரை ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டராகவே பார்த்தனர். அதன் விளைவாக 2017-இல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டி20 அணியில் இடம்பெற்றார்.
அதன்பின்பு தொடர்ந்து இந்திய டி20 அணியில் ஓர் அங்கமாகவே திகழ்ந்தார் வாஷிங்டன் சுந்தர். அதேபோல ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் முக்கிய வீரராகவும் திகழ்ந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் டி20 தொடரில் விளையாடினார். அதன் பின்பு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் நெட் பவுலராக அணியுடனே தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் ஜடேஜா காயம் காரணமாக விளையாடவில்லை, அஸ்வினும் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தவரவிடாத வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் முக்கியமான அரை சதத்தை அடித்தார்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/JvDj0pSU1S8" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>