AsianGames2023: சொல்லி அடித்த கில்லி.. 39 ஆண்டுகால பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷாவின் சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
பி.டி.உஷா, வித்யா ராம்ராஜ்
பி.டி.உஷா, வித்யா ராம்ராஜ்ட்விட்டர்
Published on

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும் இந்தப் போட்டிகள் அங்குள்ள நிங்போ, வென்சோ, ஹூசோ, ஷவோக்ஸிங், ஜின்ஹூவா ஆகிய 5 நகரங்களில் நடைபெற இருக்கின்றன.

61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில், 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்ட்விட்டர்

சீனாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக். 2) நடைபெற்ற 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.டி.உஷா 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியை 55.42 வினாடிகளில் கடந்தார். இந்திய வீராங்கனைகளில் பி.டி.உஷாவின் இந்த ஓட்டமே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது பி.டி.உஷா, மாநிலங்களவை எம்.பியாக இருந்து வருகிறார். 39 ஆண்டுகளாக இருந்துவந்த இந்தச் சாதனையை, தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

”பி.டி.உஷா சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரைப்போல நானும் ஆகவேண்டும். ஆசியப் போட்டிகளில் அதை செய்வேன்" எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வித்யா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், கூறியபடி அதை நிறைவேற்றியும் உள்ளார்.

வித்யா ராம்ரஜ்
வித்யா ராம்ரஜ்ட்விட்டர்

மேலும், இந்த சாதனையின் மூலம், இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளார். இதனால் ஆசிய விளையாட்டில் பி.டி.உஷாவின் சாதனையைத் தகர்ப்பார் எனவும், தங்கம் வென்று சாதிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com