கோலி எப்படி அவுட் ஆவார்? ரசிகை கணித்தது போன்றே நடந்த ஆச்சரியம்

கோலி எப்படி அவுட் ஆவார்? ரசிகை கணித்தது போன்றே நடந்த ஆச்சரியம்
கோலி எப்படி அவுட் ஆவார்? ரசிகை கணித்தது போன்றே நடந்த ஆச்சரியம்
Published on

முன்னாள் கேப்டன் விராட் கோலி, இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் எப்படி அவுட் ஆவார் என்பதை முன்பே கணித்த ரசிகையின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி, இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியப் பிறகு, ரோகித் சர்மா தலைமையில் இந்தியா சந்திக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். மேலும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி என்பதாலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 29 ரன்களிலும், மயங்க் அகர்வால் 33 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி, 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்திருந்தது. ஹனுமா விகாரியும் (30), விராட் கோலியும் (15) களத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 100-வது போட்டியில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன்களுடன் விராட் கோலி ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் எப்படி அவுட் ஆவார் என்பதை, 12 மணி நேரத்திற்கு முன்பே கணித்த ஒருவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதனை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்று அதிகாலை 12.46 மணிக்கு அந்த ரசிகை ஒரு ட்வீட் பதிவுசெய்துள்ளார்.

அதில், கோலி தனது 100-வது டெஸ்டில் சதமடிக்க மாட்டார். 100 பந்துகளுக்குள்  45 ரன்களை மட்டுமே அடிப்பார். 4 சிறப்பான கவர் ட்ரைவ்களை அடிப்பார். எம்புல்டேனியா பந்தில் ஸ்டம்ப் அவுட்டாவார். பின்னர் எப்படி அவுட்டானோம் எனப்புரியாமல், திகைத்து நிற்பார் எனக் கூறியிருந்தார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டவாறு விராட் கோலி இன்றைய ஆட்டத்தில், 4 கவர் டிரைவ் ஷாட் அடித்தார்.

அவர் குறிப்பிட்டவாறு 100 பந்துகளுக்குள் (76 பந்துகளில்) 45 ரன்கள் குவித்து, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது விக்கெட்டை பறிகொடுத்தவுடன் திகைத்தவாறே பந்து வீச்சாளரை பார்த்து ஏமாற்றத்துடன் தனது தலையை ஆட்டி பெவிலியன் நோக்கியும் நடந்தார். இறுதியில் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்தால், முதல் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com