“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்

“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்
“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்
Published on

டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது தொடர்பாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி டி20 தொடர் மழையின் காரணமாகவே சமனில் முடிந்ததாகவும், இல்லையென்றால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று நடந்த 3-வது டி20 போட்டியில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, கேப்டன் கோலி மட்டும் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இது அவரது தனிப் போராட்டமாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதவுள்ளது. 

இதுதொடர்பாக கருத்துகளை பகிர்ந்துள்ள கில்கிறிஸ்ட், “கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போன்றே, இந்தத் தொடரில் விராட் கோலி 4 போட்டிகளில் அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கிறேன். கடந்த சில நாட்களாக நான் அவருடன் உரையாடினேன். அவரது நம்பிக்கையை பார்த்த பின்னர், அவரது சிட்னி பேட்டிங்கை பார்த்தேன். அவர் மட்டும் சரியாக விளையாடவில்லை என்றால் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியா வெற்றி பெறுவதற்கான வழி, கோலியுடன் சேர்ந்து மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான். கோலியுடன் கூடிய பேட்டிங் மற்றும் சிறந்த பந்துவீச்சு இருந்தால் தான் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெல்ல முடியும்” என்றார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, 2-0 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்த நான்கு போட்டிகளிலும் விராட் கோலியின் விஸ்வரூபத்தை பார்த்து ஆஸ்திரேலிய அணியே அதிர்ந்துபோனது. 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கோலி 694 ரன்கள் குவித்தார். அப்போது இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், தற்போது இந்திய அணி கோலி தலைமையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலி தலைமையை ஏற்ற பின்னர், தொடர்ந்து இந்தியா சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com