’கபடி, உலக அளவில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற காரணம், இந்திய கபடி வீரர்களின் உடல் தகுதியும் மன உறுதியுமே ஆகும்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார்.
புரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டிகளில் யூ மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணிகள் வெற்றி பெற்றன.
மும்பையில், நடைபெற்ற முதலாவது போட்டியில் யூ மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை குவித்ததால், ஆட்டம் பரபரப்படைந்தது. முதல்பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், டு ஆர் டை ரைடு சென்ற யூ மும்பா வீரர் அபிஷேக் சிங், இரு புள்ளிகள் எடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய யூ மும்பா, 33க்கு23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தரை எதிர்த்து பெங்கால் வாரியர்ஸ் களம் கண்டது. இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய நிலையில், ரசிகர்களிடையே பரபரப்பு பற்றிக் கொண்டது. இறுதியில் 27க்கு25 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தேசிய கீதம் பாடியதோடு, ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாக மூட்டினார். அவர் பேசும்போது, ''புரோ கபடி லீக் தொடங்கியதில் இருந்து, கபடி நம் நாட்டில் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளாக இருக்கும் போது விளையாடிய விளையாட்டை, இப்போது பார்ப்பது வேறு விதமான உணர்வை தருகிறது. உலக அளவில் இந்திய கபடி அணி, மிகச் சிறந்த அணியாக இருக்கிறது. உலக அளவில் கபடி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற, இந்திய வீரர்களின் உடல் தகுதியும் மன உறுதியுமே காரணம்’’ என்றார்.