தான் ஏன் அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறினேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கும் நபர் கேப்டன் விராட் கோலி. அண்மையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட கிரிக்கெட் உலகில் நல்ல உடற்தகுதியுடன் உள்ள ஒரே வீரர் கோலி என்றும் அதற்கு அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்றும் பெருமைப்பட தெரிவித்திருந்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கோலி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார் . அப்போது தான் ஏன் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறினேன் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அதில் " 2018க்கு முன்பு நான் அசைவ உணவுகளை உண்டு வந்தேன். இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்கு வந்ததற்கு (2018) முன்பு நான் அசைவ உணவைக் கைவிட்டுவிட்டேன். 2018 இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் வலி ஏற்பட்டு ஓர் இரவு முழுக்கத் தூங்காமல் இருந்தேன். பிறகு பரிசோதனைகள் செய்து பார்த்தேன். என் உடல் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்தது. என் உடலும் அமிலத்தன்மையுடன் இருந்தது" தெரியவந்தது.
மேலும் தொடர்ந்த கோலி " கால்சியம், மாக்னீசியம் எல்லாம் எடுத்தும் மாத்திரைக்கு என் உடலால் சரியாக இயங்க முடியவில்லை. எனவே என் எலும்பிலிருந்து கால்சியத்தை உடல் எடுத்துக்கொண்டது. என் எலும்புகள் பலவீனமாகின. அதனால் தான் எனக்குச் சிக்கல் ஏற்பட்டது. பிறகு, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் பாதியில் அசைவம் உண்பதை நிறுத்தினேன். இதனால் யூரிக் அமிலம் சுரப்பதை நிறுத்த முடிந்தது. உடலின் அமிலத்தன்மையையும் குறைக்க முடிந்தது".
சைவ உணவுப் பழக்கம் குறித்து கூறுகையில் " சைவத்துக்கு மாறி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. என் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. காலையில் எழும்போது இப்படியொரு புத்துணர்ச்சியை முன்பு உணர்ந்ததில்லை. ஓர் ஆட்டத்தின் சோர்விலிருந்து விரைவாக மீள முடிகிறது. ஒரு வாரத்துக்கு தீவிரமான மூன்று ஆட்டங்களில் விளையாடினாலும் என்னால் 120 சதவீதம் உற்சாகமாக விளையாடமுடியும். ஒரு டெஸ்ட் ஆட்டம் ஆடிமுடித்தால் ஒருநாளில் மீண்டுவிடமுடியும். உடனே அடுத்த டெஸ்ட் ஆடமுடியும். அசைவம் உண்பதை விடவும் இப்போது நல்லவிதமாக உணர்கிறேன்"
இறுதியாக பேசிய கோலி " சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே சைவத்துக்கு மாறியிருக்க வேண்டும். இந்தப் பழக்கம் இப்போது எல்லாவறையும் மாற்றிவிட்டது. உடல் லேசாகிவிட்டது, நேர்மறை எண்ணங்களுடனும் அதிக சக்தியுடனும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.