‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’

‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’
‘சச்சினுக்கு பிறகு விராட் கோலி’
Published on

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கேப்டன் விராட் கோலி மட்டும் 149, 51 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொதப்பினர்.

இந்நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 934 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

ஜோ ரூட்(865), கேன் வில்லியம்ஸன்(847), டேவிட் வார்னர்(820) முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்திய அணியின் புஜாரா 791 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் காம்பீர், சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் மற்றும் திலிப் வெங்க்சர்கார் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பிடித்துள்ளனர். 2011ம் ஆண்டு சச்சின் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பிடித்தார். அடுத்த 7 வருடம் கழித்து தற்போது விராட் முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி 2008ம் ஆண்டு ஐசிசி 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை வென்றார். 2017ல் ஐசிசி சிறந்த வீரருக்கான சர் கர்பீல்டு சோபெர்ச் டிராபி கௌரவ பட்டம் வென்றார். தற்போது ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சை பொறுத்தவரை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன்(884) முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா(857) மூன்றாவது இடத்திலும், ரவிசந்திர அஸ்வின்(825) 5வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டருக்கான தரவரிசையில் ஜடேஜா(385) 2வது இடத்திலும், அஸ்வின்(359) 4வது இடத்திலும் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com