2014 இங்கிலாந்து தொடரின்போது, தான் மன அழுத்தத்தில் இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் விராட் கோலி "Not Just Cricket" என்ற நிகழ்ச்சியில் உரையாடினார். அப்போது 2014 இங்கிலாந்து தொடரின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்தத் தொடரில் விராட் கோலிக்கு மிகவும் மோசமாக அமைந்ததால் அவரிடம் முக்கியமான ஒரு கேள்வியை முன்வைத்தார் மார்க் நிக்கோலஸ். அது "2014 இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை அப்போது மன அழுத்தம் ஏற்பட்டதா?" என கேட்டார்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி "ஆம். எனக்கு மன அழுத்தம் இருந்தது. இதில் இருந்து எப்படி மீள்வது என புரியவில்லை. சில விஷயங்களில் இருந்து எப்படி கடந்து வருவது என்று சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போன்று அப்போது உணர்ந்தேன். நீங்கள் சரியாக ரன் சேர்க்காதபோது காலையில் எழுந்திருப்பதே ஒரு குற்ற உணர்வை தரும். சில கட்டங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலுமே பேசிய அவர் "ஒரு நபரின் வாழ்க்கையை மன அழுத்தம் அழித்துவிடும். பல கிரிக்கெட் வீரர்கள் மனநல பிரச்சினைகளுடன் பலரும் நீண்ட காலமாக போராடுகின்றனர். சில நேரங்களில் மாதக்கணக்கில், ஒரு ஆண்டு முழுக்க கூட இது தொடருகிறது. இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து மீளலாம்" என்றார் விராட் கோலி.