ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய துணைக் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும் என்று விராட் கோலி விரும்பியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார் விராட் கோலி. அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி நேற்று அறிவித்தார். மேலும், இந்திய டி20 அணிக்கு உலகக் கோப்பைக்கு பின் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே துணை கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் ஒருநாள் , டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் தொடரமாட்டார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் உலா வருகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக ரோகித் சர்மாவுக்கும், கோலிக்கு இடையே சிறு கருத்து வேறுபாது இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கோலி தீடீரென்று தன் பதவி விலகல் முடிவை அறிவித்தார். இந்நிலையில் ஏற்கெனவே புகைந்துக்கொண்டிருக்கும் விஷயத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றுவது போல ஓர் செய்தி பரவி வருகிறது.
பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, அண்மையில் பிசிசிஐ தேர்வாளர்கள் குழுவிடம் பேசிய கோலி "ரோகித் சர்மாவுக்கு 34 வயதாவதால் அவரை ஒருநாள் போட்டியின் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும். மேலும் டி20 போட்டிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்ட்டை துணைக் கேப்டனாக்க வேண்டும். இந்த முடிவுகள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.