இங்கிலாந்தில் ஷாட்களை தேர்வு செய்து விளையாடுவதில் கோலி தவறிழைத்துவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மேலும் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இதுவரை விளையாடியுள்ள 5 இன்னிங்ஸில் மொத்தம் 124 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளது.
இது குறித்து சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய சுனில் கவாஸ்கர் "கோலி தன்னுடைய ஷாட்களை தேர்வு செய்வதில் தவறிழைத்துவிட்டார். மிகவும் எளிமையாக விளையாடி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை சேர்த்துள்ளார். பேட்டிங் கிறீஸ்க்கு வெளியே நின்று விளையாடி 6500 ரன்களை எடுத்துள்ளார். அதனால் அந்த ஸ்டைலை அவர் மாற்ற வேண்டிய அவசியமில்லை. கோலியின் ஷாட் தேர்வில்தான் பிரச்னை" என்றார்.
மேலும் பேசிய அவர் "எந்தப் பந்தை அடிக்க வேண்டும், எதை விட வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். புஜாரா தன்னுடைய இன்னிங்ஸில் அதை சரியாக செய்தார். இதுவரை கோலி அவுட்டான எந்த பந்தையும் அவர் விளையாடி இருக்க வேண்டிய அவசியமில்லை. டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஓர் நாள் இருக்கிறது, அணி 139 ரன்கள் பின் தங்கியிருக்கும்போது ஷாட்களில் கூடுதல் கவனம் தேவை. 4 ஆவது ஸ்டம்புக்கு பந்து வந்தால் அதை விளையாடலாம். ஆனால் 5, 6 ஆவது ஸ்டம்புக்கு போகும் பந்தை அடிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார் சுனில் கவாஸ்கர்.