"விராட் கோலி விரைவில் ரன்களை சேர்ப்பார். அவருக்கு இப்போது சறுக்கல் வந்திருக்கிறது. அவரும் மனிதர்தானே" என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர்.
இது குறித்து பேட்டியளித்துள்ள அவர் "உலகின் தலைச் சிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். நான் ஏன் தலைச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று கூறுகிறேன் என்றால், கோலியால் முன்புபோல் இப்போது ரன்களை சேர்க்க முடிவதில்லை. ஆனால் மறுமுனையில் இப்போது ஜோ ரூட் அதிகப்படியான ரன்களை குவிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய பரூக் இன்ஜினியர் "விராட் கோலி போன்ற அற்புதமான வீரர் எப்போதெல்லாம் ஆடுகளத்தில் நுழைகிறாரோ அப்போதெல்லாம் அவரிடம் இருந்து நாம் சதத்தை எதிர்பார்க்கிறோம். கோலியும் ஒரு மனிதர்தான் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அவரும் தவறுகள் செய்வார். ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பதற்கு சில நேரங்களில் அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும். அது இல்லை என்றால் நம்முடைய மோசமான பார்ம் இன்னும் மோசமாகும், அதனால் ஆட்டமிழப்பு எளிதாக நடந்துவிடும்" என்றார்.
இறுதியாக பேசிய அவர் "நான் கோலியை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போதும் அவரால் 40, 50 ரன்களை சேர்க்க முடிகிறது. அதனைத்தொடர்ந்து எடுத்து செல்ல அவரால் முடியவில்லை. விரைவில் அதனை அவர் செய்வார். ஏனென்றால் கோலி ஒரு கிளாஸ் வீரர்" என்றார் பரூக் இன்ஜினியர்.