ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. அப்போது டிம் பெய்னும், விராட் கோலியும் பரஸ்பரமாக வார்த்தையிலேயே மோதிக்கொண்டனர். நடுவர்கள் எச்சரித்த நிலையில் இருவரும் அமைதியாக சென்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.
விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த மிட்செல் ஜான்சன், ‘‘ஆட்டத்தின் கடைசியில் கண்ணுக்குக்கண் பார்த்து இருவரும் கைகுலுக்கி அருமையான போட்டி என்று கூற வேண்டும். அதன்படி கோலி கைகுலுக்கினார், ஆனால் அவர் கண்களைப் பார்க்கவில்லை, இது அவமரியாதையானது.
விராட் கோலியின் இதுபோன்ற நடத்தை கண்டுகொள்ளப்படுவதில்லை, அவரை பீடத்தில் ஏற்றுகின்றனர். ஆனால் இந்த டெஸ்ட்டில் அவரின் செயல்பாடுகள் அவரை மலிவான மனிதராகவே காட்டியது. தொடருக்கு முன்பு பேசிய கோலி தான் குணத்தில் மாறிவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரிடம் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை. எனக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் ''எனக்கும் அவருக்கும் 2014 மெல்போர்ன் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. நான் பந்தை தடுத்து குறிவைத்து வீசினேன். ஆனால் அது கோலி மீது பட்டது, நான் அதற்காக மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவரோ, ‘உங்களை நான் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பேசினார்'' என்று அவர் தெரிவித்தார்